இஸ்லாமும் தோழமையும். பூவோடு சேறும் நாறும் மனக்குமாம். ஹபிழ் ஸலபி மத்திய கிழக்கிலிருந்து…..

ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும், மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.

இதுபோன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.

நட்பினால் பல பயன்களை மனிதன் அடைவதால் நாம் எல்லோரும் நட்பு கொள்கிறோம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம்முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக காலத்தை கடத்துவதற்கு ஒரு சாதனமாக நட்பு இங்கு பயன்படுகிறது.

நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது நண்பனிடம் தெரிவிக்கும் போது நெஞ்சத்தில் ஏற்பட்ட கனம் காணாமல் போய் விடுகிறது. இங்கு நட்பு என்பது கட்டடத்தைத் தாக்க வரும் மின்னலை இடிதாங்கி வாங்கிக் கொண்டு கட்டடத்தை காப்பதைப் போல உதவுகிறது.

நண்பர்களை அதிகம் பெற்றவர்கள் தங்களது காரியங்களை சுலபமாக முடித்துவிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் நண்பர் பணிபுரிந்தால் இவர் மருத்துவமனை செல்ல நினைக்கும் போது தேவையான ஏற்பாடுகளை நண்பரே செய்து கொடுக்கிறார். கஷ்டங்கள் வரும்போது பக்கபலமாகவும் நிற்கிறார்.

இன்னும் இது போன்று பல பயன்கள் நட்பின் மூலம் மனிதர்களுக்கு கிடைப்பதால் நபி (ஸல்) அவர்கள் நட்புவைப்பதை நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4760)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதி (1867) 

அழகிய நட்பு இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளதால். எனவே நட்பின் ஒழுங்குகளை அறிந்து அதன்படி செயல்படுவோம்.
நல்ல நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால்…

ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள்.

இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களேத் தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3336)

நல்லவர்களை நண்பர்களாக்குதல்.

ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கங்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கச்சீலனாக மாறிவிடுகின்றான். "பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்'' என்ற பழமொழியும் இதைத் தான் உணர்த்துகிறது.
நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய ஈருலக வாழ்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி (2101)

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையை தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74:45)

நம்மை நாமே சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொண்டாலும் பல நேரங்களில் மனம்போன போக்கில் சென்று விடுகிறோம். தவறான முடிவுகளையும் எடுத்துவிடுகிறோம். ஆனால் நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்மை பாதுகாத்து விடுவான்.

நபிமார்கள் நல்வழியை மக்களுக்கு போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாக பெற்றிருக்க வேண்டும்.

அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித்தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார். 
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி (7198)

நட்பு என்பது இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு மறுமையில் பெரும் நன்மையையும். பெற்றுத் தருகிறது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவருடன் மறுமையில் நாம் இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்முடைய நேசத்திற்குரியவர் அதிகமான நற்செயல்களை செய்து நாம் அவர் செய்த நல்லறங்களைப் போல் செய்யாவிட்டாலும் அவருடன் இருக்கும் சிறப்பை இறைவன் நமக்குத் தருவான். எனவே நம்மை விட அதிக நன்மை புரிபவர்களுடைய நட்பை நாம் தவறவிடுவது மாபெரும் கைசேதம். நல்லோர்களின் நட்பு இவ்வளவு பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் என்பதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது. 

(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) அவர்கள் 
நூல்: புகாரி (6170)

அல்லாஹ்விற்காக நட்பு வைத்தல். 

பெரும்பாலான நண்பர்கள் வீணாக பேசுவது ஊர் சுத்துவது திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீயகாரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகிவிட்டது. இஸ்லாத்தை பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்பு வைத்தவர் களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) 
நூல்: அபூதாவூத் (4061)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர், இல்லை. கண்ணியமானவனும் சங்கையான வனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4656)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவுசெய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி) 
நூல்: அஹ்மத் (21114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் (4655)

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள். 
அறிவிப்பவர்: உமர் பின் அல்ஹத்தாப்(ரலி)
நூல்: அபூதாவூத் (3060)

உயிர் காப்பான் தோழன்.

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடிவிடுவார்கள். புயல்காற்று வரும் போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்று நமக்கு தெரிகிறது. அது போல் நல்ல நண்பனை அறிய நமக்கு வரும் சோதனைகள் சிறந்த அளவுகோலாக பயன்படுகிறது.

உண்மையான நட்பை பற்றி குறிப்பிடும் போது "உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு'' என்று கூறுகிறது குறள். அதாவது தன் ஆடை விலகும் போது கை விரைந்து சென்று ஆடையை பிடித்து மானத்தை காப்பாற்றுவதைப் போல் நண்பன் கஷ்டப்படும் போது விரைந்து சென்று கஷ்டத்திலிருந்து அவனை விடுவிப்பவனே உண்மை நண்பன் என்பது இதன் அர்த்தம். இதே பொருளில் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியைச் சொல்கிறார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல்: புகாரி (2442)

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்.

தீமையான காரியங்களில் நண்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நண்பன் நன்மையான காரியங்களை செய்ய மறந்து விட்டால், உண்மை நன்பன் அவனுக்கு நினைவூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்துவிட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும்.

நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் திருக்குர்ஆன், நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு பணிக்கு பொறுப்பேற்று அல்லாஹ் அவருக்கு அதன் மூலம் நல்லதை நாடினால் அவருக்காக ஒரு நல்ல ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தாலும் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டுவார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிவார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ (4133)

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல்: புகாரி (24)

தவறு செய்தால் மன்னிப்பு கோர வேண்டும்.

தவறு நம் தரப்பிலிருந்து ஏற்படுமேயானால் கவுரவம் பார்க்காமல் நண்பனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமாகவும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவருமான அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் நண்பர்களின் மனம் புண்படும்படியாக பேசிவிட்டோமோ என்று நினைத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். இது போன்ற குணம் நண்பர்களிடையே வந்துவிட்டால் பகைமைக்கு அங்கு வேலையே இல்லை.

பிலால், சுஹைப், சல்மான் இன்னும் சிலர் (இருந்த சபைக்கு) அபூ சுஃப்யான் அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், "(அபூசுஃப்யானைப் பார்த்து) அல்லாஹ்வுடைய வாட்கள் அல்லாஹ்வின் எதிரியின் கழுத்தில், தாம் பதம் பார்க்க வேண்டிய இடத்தில் இன்னும் பதம் பார்க்கவில்லை'' என்று கூறினார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், (அவர்களிடம்) "குரைஷிகளின் தலைவரிடத்திலா இப்படி பேசுகிறீர்கள்?'' என்று கூறி விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதை கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "அபூபக்ரே, நீர் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திருக்கலாம்.  நீர் அவர்களை கோபப்படுத்தியிருந்தால் உமது இறைவனை கோபப்படுத்தி விட்டீர்'' என்று கூறினார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த நபித் தோழர்களிடம் வந்து, "சகோதரர்களே, உங்களை நான் கோபப்படுத்தி விட்டேனா?'' என்று கேட்டார்கள். அவர்கள், "இல்லை. என் சகோதரரே, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயித் பின் அமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4559)

பிரதி உபகாரம் செய்ய வேண்டும்.

எப்போதும் நண்பன் நமக்கு செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர் ஒருமுறை செலவு செய்தால் அடுத்த முறை நாம் அவருக்கு செலவு செய்ய வேண்டும். சிலர் நண்பனுக்காக தன் புறத்திலிருந்து எதையும் கொடுக்காமல் அவனிடமிருந்து அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு நன்மை செய்தால் அதற்கு பதிலாக அவனுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும். பொருள்வசதி நம்மிடம் இல்லாவிட்டால் அதிகமாக நண்பனுக்காக துஆ செய்ய வேண்டும்.

அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து யார் அடைக்கலம் கேட்கிறாரோ அவருக்கு அடைக்கலம் தாருங்கள். உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்க பிரதிஉபகாரம் செய்யுங்கள். (பிரதி உபகாரம் செய்ய பொருள்) உங்களிடத்தில் இல்லா விட்டால் அவருக்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்து விட்டீர்கள் என்னும் அளவிற்கு அவருக்காக துஆ செய்யுங்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) 
நூல்: நஸயீ (2520)

நட்பை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் ஒருவரை நேசிக்கிறோம். ஆனால் அவருக்கு நம்முடைய நேசம் தெரியாது. இந்நேரத்தில் கூச்சப்படாமல் அவரிடம் சென்று நமது நட்பை தெரிவித்து நண்பர்களாகிக் கொள்ள வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் கடந்து சென்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே (கடந்து செல்லும்) இவரை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதை அவரிடம் தெரியப்படுத்தினாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் எழுந்து சென்று அவருக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். அவர் அந்த நண்பரிடம் எழுந்து சென்று இன்னாரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விற்காக நான் உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் எவனுக்காக என்னை நீங்கள் நேசிக்கிறீர்களோ அவன் உங்களை நேசிப்பானாக என்று கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: அஹ்மத் (11980)

குறைகளை துருவித் துருவி ஆராயக்கூடாது.

நண்பரைப் பற்றி தவறாக ஒரு செய்தி வந்தால் உடனே அதை நம்பிவிடக் கூடாது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் சந்தேகக் கண்ணுடன் குறைகளை ஆராய்வது நமக்குத் தேவையில்லாத விஷயம். நல்ல காரியங்களில் தவிர மற்ற விஷயங்களில் நண்பனை பார்த்துப் பொறாமைப் பட்டால் நட்பு வளர்வதற்குப் பதிலாக குரோதங்களும் பகைமையும் வளர்ந்து கொண்டே செல்லும். என்றும் நட்பு நிலைத்திருப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (59:10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6064)

ஏமாற்றக்கூடாது.

நட்பை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி பணம் வசூலித்து நண்பனை சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். இவர்களெல்லாம் நண்பன் போல் நடித்து காரியம் நடத்தும் நயவஞ்சகர்கள். இது போன்ற பொய்யர்களை கண்டுகொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் சில அடையாளங்களை கூறியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (33)

கோபம் கொள்ளக்கூடாது.

நம் தோழர்களை திருத்துவதற்காக நாம் பல முயற்சிகளை எடுப்போம். அவர்கள் தீமை செய்யும போது எடுத்துச் சொல்லி தீமைக்குத் தடைக்கல்லாக இருப்போம். அவனுடைய விருப்பத்திற்கு நாம் தடையாக இருப்பதினால் சில நேரங்களில் எடுத்தெறிந்து பேசி விடுவான். இந்நேரத்தில் அவன் மீது கோபப்பட்டு தவறான வார்த்தைகளை கூறிவிடக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் இருவர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் வணக்கத்தில் திளைத்தவராக இருந்தார். அந்த வணக்காசாலி தன் நண்பரை பாவம் செய்யக் காணும் போதெல்லாம் (இதை) செய்யாதே என்று கூறுவார். ஒரு நாள் ஒரு பாவம் செய்பவராக தன் நண்பரை அவர் கண்ட போது அவரிடத்தில் (இதை) செய்யாதே என்று கூறினார். அதற்கு அவர், "என்னை விட்டுவிடு. எனக்கும் என் இறைவனுக்கும் இடைப்பட்ட (விஷயம் இது) என்னை கவனிப்பவராக நீ அனுப்பப் பட்டுள்ளாயா?'' என்று கேட்டார். அந்த வணக்கசாலி, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான் அல்லது சொர்க்கத்தில் உன்னை கொண்டு செல்லவே மாட்டான்'' என்று கூறினார். பின்பு இவ்விருவர்களின் உயிரையும் அல்லாஹ் கைப்பற்றினான். அவர்கள் இருவரும் அகிலத்தின் இறைவனிடம் ஒன்று சேர்ந்தார்கள். அப்போது அல்லாஹ் அந்த வணக்கசாலியைப் பார்த்து, "என்னைப் பற்றி நீ அறிந்தவனா? என் கைவசம் உள்ளதைச் செய்ய நீ சக்தி படைத்தவனா?'' என்று கூறி விட்டு பாவம் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, "செல். என்னுடைய அருளாள் சொர்க்கத்தில் நுழைந்து கொள்'' என்று கூறினான். மற்றவரைப் பார்த்து "இவரை நரகிற்கு அழைத்துச் செல்லுங்கள்'' என்று கூறினான். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவுத் (4255)

மானத்துடன் விளையடக்கூடாது.

ஜாலி என்ற பெயரில் தன் நண்பனின் மானத்துடன் சில நேரங்களில் நாம் விளையாடி விடுவதுண்டு. நண்பனின் மனம் புண்படும் விதத்தில் நமது வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது. மகிழ்ச்சி என்ற பெயரில் நண்பனை கேலிப்பொருளாக ஆக்கிவிடக்கூடாது. தனிப்பட்ட முறையில் நம் நண்பனிடம் நடந்துகொள்வதைப் போல் ஒரு சபையில் நடந்துகொள்ளக் கூடாது. மரியாதை தர வேண்டிய இடங்களில் அற்பமாகக் கருதி மட்டம் தாழ்த்தக் கூடாது. மோசமான வார்த்தைகளை உபயோகிக்காவிட்டாலும் அற்பமாக நினைப்பதே பாவம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தீயவர் என்பதற்கு முஸ்லிமான தன் சகோதரனை அற்பமாக நினைப்பதே போதுமானதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4650)

பெருமையடிக்கக் கூடாது.

தனது நண்பனிடத்தில் தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் பெருமையான பேச்சுக்களைப் பேசுகிறார்கள். இந்த மோசமான குணம் இருந்தால் கண்டிப்பாக வலுவான நட்பு ஏற்படாது. நம்முடைய நண்பனும் நம்மைப் போன்ற மனிதன் தான் என்று நினைத்து அவனை வேறுபடுத்திப் பார்க்காமல் பழகும் போது உயிரையும் கொடுக்கும் நண்பனாக அவன் மாறுகிறான்.  இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறும் உபதேசத்தை கடைபிடித்தால் நமது நட்பு வலுப்படும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு (உங்களில்) ஒருவர் இன்னொருவரிடத்தில் வரம்பு கடக்காமல் இன்னும் பெருமையடிக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள் என்று வஹீ அறிவித்துள்ளான்.
அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார்(ரலி)
நூல்: அபூதாவூத் (4250)

நட்பை முறித்துவிடக் கூடாது.

சில நேரங்களில் மிக நெருக்கமாக பழகுபவர்களுக்கிடையில் மனஸ்தாபங்களும் பிரச்சனைகளும் எழுவதுண்டு. இதை பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுத்து நட்பைத் தொடர வேண்டும். அற்ப விஷயங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டு பகைவர்களாக பலர் வாழ்கிறார்கள். அதிக பட்சமாக 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. நல்ல நட்பிற்கு இறைவனிடத்தில் கூலி இருப்பதால் இது ஒரு நற்செயலாக கருதப்படுகிறது. எந்த ஒரு நற்செயலையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப் படும்) நிலையான நற்செயலே ஆகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 
நூல்: புகாரி (6464)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டு அவரும் அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரீ (ரலி)
நூல்: புகாரி (6237)

நல்லவர்களுடைய தொடர்பை முறித்துவிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பின்வரும் வசனத்தில் அறிவுரை கூறுகிறான்.

(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்! 
அல்குர்ஆன் (6:52)

Post Disclaimer | Support Us

Support Us

The sailanmuslim.com web site  entirely supported by individual donors and well wishers. If you regularly visit this site and wish to show your appreciation, or if you wish to see further development of sailanmuslim.com, please donate us

IMPORTANT : All content hosted on sailanmuslim.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.