இந்த நாட்டின் கல்வித் திட்டமும் பரீட்சை முறையும் முற்று முழுதாக மீள்பரிசீலனை செய்யப் படவேண்டும் !

 

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
 
இந்த நாட்டின் கல்வித் திட்டமும் பரீட்சை முறையும் மிகக் கொடியவை, முற்றுமுழுதாக அவை மீள்பரிசீலனை செய்யப் படவேண்டும்.  
 
வருடாந்தம் க பொ த சா தரப் பரீட்சையில் சுமார் 45% வீதத்திற்கு மேற்பட்டோர் அதாவது சுமார் 1,25,000 பேர்கள் சித்தியடைவதில்லை. அதே நிலைதான் உயர்தரப் பரீட்சையிலும்.
 
2010 ஆம் ஆண்டு  சாதாரண தர பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 271,644 அதில் 164527 பேர் சித்தியடைய 107117 பேர் சித்தியடையவில்லை.
 
2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பாடசாலை மட்டத்திலும் பிரத்தியேகமாகவும் க பொ த  சாதாரண தரப்  பரீட்சை எழுதியவர்கள் மற்றும் அதில் சித்தியடைந்தவர்கள் விபரம் வருமாறு:
 
அதேபோல் 2010 உயர் தரப் பரீட்சை 141510 பேர் பாடசாலை மட்டத்தில் அமர்ந்து அதில் 79,825 பேர் மாத்திரம் சித்தியடைய மிகுதி 61,685 பேர் சித்தியடையவில்லை.
 
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் எழுதிய 18,816 மாணவர்களில் 7309 (38.84%) மாணவர்களே சித்தியடைந்தனர், 11,507 பேர் மாணவர்கள் சித்தியடையவில்லை, சுமார் 62% வீதமானோர்.
 
 
பௌதீக விஞானப்பிரிவில் பரீட்சை எழுதிய 14,938 பேரில் 5,419 பேர் (36.28%) சித்தியடைய மிகுதி 11,519 பேர் சித்தியடயத்த் தவறினர்.
 
மேற்படி சித்தியடையத் தவறிய 23026 மாணவர்கள் O /L பரீட்ச்சையில் அபாரமான திறமைச் சித்திகளைப் பெற்றவர்கள், அவர்கள் சராசரி திறமைசாலிகளை விட உயர்நிலையில் கற்றவர்கள்.
 
 
வர்த்தகப் பிரிவில் 58.49% மானவர்களும் கலைபிரிவில் 64.37% மானவர்களும் சித்தியடைய மிகுதிப் பேர் சித்தியடையவில்லை.
2010 உயர் தர பரீட்சையில் சுமார் 50% மாணவர்கள் கலைத்துறையில் கற்றமை குறிப்பிடப் படல் வேண்டும்.
 
2008 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பாடசாலை மட்டத்தில் உயர் தரப் பரீட்சார்த்திகள் தெரிவு செய்திருந்த துறைகளும் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவானோர் எண்ணிக்கைகளும் இந்த அட்டவணையில் தரப்படுகிறது :
 
A /L சித்தியடைந்த 79,825 மாணவர்களில் சுமார் 22,000 பேருக்கே இலங்கையில் பல்கலைக் கழகங்களில் நுழைவு கிடைக்கிறது, 2010 ஆம் ஆண்டு பாடசாலை மட்டத்திலும் பிரத்தியேகமாகவும் உயர்தரப் பரீட்சையில் சுமார் 233,609 மாணவர்கள் தோற்றினர், இவர்களுள் 142,516 மாணவர்கள் சித்தியடைந்தனர் (54.124%) அவர்களுள் 22,016 (15.5) மாணவர்கள் மாத்திரமே பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாயினர்.
 
 எடுத்த எடுப்பில் இந்த பின்னடைவுகளுக்கு காரணங்கள் பல கூறப் படுகின்றன அவற்றையும் மறுப்பதற்கில்லை, உதாரணமாக வளப்  பற்றாக்குறை, ஆசிரியர்களின் பற்றாக்குறை, மாணவர்களின் வினைத்திறன் விருத்தியின்மை, பெற்றாரின் கவனயீனம், நாட்டின் பொருளாதார நிலை, வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு போதாமை, நிபுணத்துவ மேம்பாட்டிற்கான ஏற்பாடுகள் குறைவாய் இருக்கின்றமை என இன்னோரன்ன காரணங்களை குறிப்பிடலாம்.
 
அனால் இவற்றிற்கு அப்பால் இந்த நாட்டின் கல்வி உயர்கல்வித் திட்டம் மற்றும் பரீட்சை முறை மிகவும் பிற்போக்கான, கோரமான முகத்தைக் கொண்டுள்ளமை கசப்பான உண்மையாகும். இந்த நாட்டின் கல்வி முறை நவீன உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் பாரிய மாற்றங்களைக் காண வேண்டும். இந்த நாட்டில் சுமார் 95% வீதத்திற்கு மேற்பட்டவர்கள் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள், இந்த நாட்டில் இலவசக் கல்வி அமுலில் இருக்கிறது என்றெல்லாம் சாதகமான விடயங்களில் பெருமைப் பட்டுக் கொள்ளும் நாம் வருடா வருடம் எமது அடைவுகள் குறித்து திருப்திபட்டுக் கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றோம்.
 
 
முன்னொரு காலத்தில் கல்வியின் நோக்கம் பற்றி பேசுபவர்கள் சுருக்கமாக "நல்லொழுக்கமுள்ள நட்பிரஜைகளை உருவாக்கல்" என கூறுவார்கள்  உண்மையில் இன்றும் அந்த இலக்கில் நாம் உடன் பாடு காண்கின்றோம், அனால் நற்பிரஜைகள் எனும் பொழுது தனக்கும்  வீட்டிற்கும் நாட்டிற்கும் பொருளாதார  பொறுப்புக் கூறக் கூடிய ஆன்மீக அறிவு வளம் மிக்க நற்பிரஜைகள் என்ற தெளிவான  இலக்கு குறித்து இன்று அதிகமாக பேசப் படுகிறது அதே வேளை  அந்த இலக்கை அடைந்து கொள்கின்ற பல்வேறு நகர்வுகளும் மாறி மாறி வரும் அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப மேற்கொள்ளப் பட்டும் வருகின்றன.
 
 இந்த நாட்டில் 9685 அரசாங்க பாடசாலைகள்  இருக்கின்றன அவற்றில் 3,940,07 மாணவ மாணவியர் கல்வி பயில்கின்றனர், 214,562 ஆசிரியர்கள் சேவையில் இருக்கிறார்கள், வரவு செலவுத்திட்டத்தில் வருடாந்தம் சுமார் 3000 கோடி ரூபாய்கள் -மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 5% – கல்வி உயர்கல்விக்காக ஒதுக்கப் படுகிறது , இந்த நாட்டின் மனித வளத்தை நாட்டின் அபிவிருத்த்யின் பங்காளர்களாக மாற்றுவதற்கான இத்தகைய பாரிய முதலீடு உச்ச பயனைத் தருவது ஒரு புறமிருக்க கணிசமான பயணியாவது ஈட்டித் தருகிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியூட்டுகின்ற பெறுபேறுகளே கிடைக்கின்றன.
 
 இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தருகின்ற ஏற்றுமதி வருவாயில் 47.03 வீத பங்கினை வெளிநாட்டில் குறிப்பாக மத்திய கிழக்கில் பணிபுரிவோர் வகிக்கின்றனர், 2009 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி சுமார் 382,801 மில்லியன் ரூபாய்களை அவர்கள் வைப்புச் செய்திருந்தார்கள், ஒப்பீட்டளவில் அந்த தொகையில் சரி பாதியைத் தான் தேயிலை இறப்பர் தென்னை ஏற்றுமதிகள் ஈட்டியுள்ளன, 167,219 மில்லியன் ரூபாய்கள்,  மிகுதி சுமார் 30% விகித வெளிநாட்டு செலாவணியை  தயாரித்த ஆடைகளின் ஏற்றுமதி ஈட்டியுள்ளது.
 
 உண்மையில் கடல் கடந்து தொழில் புரிவோரில் எத்தகைய தரதரங்களில் உள்ளவர்கள் என்பதனைத் தெரிந்துகொள்ள நாம் 2011 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள புள்ளி விபரங்களை பார்க்கின்ற பொழுது சுமார் 262,960 தொழிலாளர்கள் 2011 ஆம் ஆண்டு கடல்கடந்து பிழைப்புக்காக சென்றுள்ளமை தெரியவருகிறது, அதில் 135,870 (51.7%) ஆண்கள்  127,090 (48.3%) பெண்கள்.   
 
அவ்வாறு சென்றவர்களுள் 41% விழுக்காடு பணிப் பெண்கள் என்ற கசப்பான உண்மை தெரியவருகிறது, 2010ஆம் ஆண்டு வரை வெளிநாடு சென்றவர்களுள் சுமார் 50% வீதத்திற்கு மேற்பட்டோர் பெண்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். உயர்பதவிகள் என்று பார்க்கும் பொழுது சுமார் 1.4% வீதமானோரும், அடுத்தநிலையில் 2.3% பேரும், லிகிதர் தரத்தில் 3.4% திறனுள்ள பணியாட்களாக 27.3% பேரும் தொழிற்திறன் பெறாத பணியாளர்களாக சுமார் 24.1% வீதத்தினரும் தொழிலுக்காக சென்றுள்ளனர், கடந்த வருடங்களிலும் ஏறத்தாள இதே அளவிலான பணியாளர்கள் தொழிலுக்காக கடல் கடந்து சென்றுள்ளனர்.
ஏன் எமது கல்வித திட்டமும் பரீட்சை முறையும்  சுமார்  41 வீத பணிப்  பெண்களையும், 25 % வீத கூலித் தொழி லார்களையும், 27% வீத சாதாரண தொழிலாளர்களையும் பெருமளவில் உருவாக்குகிறது என்ற கேள்வி எழுகிறது.
 
 அடுத்தபடியாக 30% வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தருகின்ற தயாரித்த ஆடைகளின் பின்புலத்தில்  பல்லாயிரக்கணக்கான சிற்ரூதிய  பெண்களின் உழைப்பில்  இந்த நாடு  தங்கியுள்ளமை தெரிகிறது, தேயிலை தென்னை இறப்பர் ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையின் பின்னாலும் ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் சோகங்கள் புதைந்து கிடக்கின்றன.

 
ஒரு நாட்டின் அபிவிருத்தியின்  பங்காளிகளாக மனித வளத்தை மாற்ற வேண்டிய கல்விமுறை இந்த நாட்டின் அபிவிருத்திக்கான குறியீடுகள் சுட்டிகள் , மனித வள அபிவிருத்திக்கான மதிப்பீடுகளில் மேலே சொல்லப் பட்டவர்களின் சமூக பொருளாதார கல்வி சுகாதார தராதரங்களை எவ்வாறு உள்வாங்கப் போகிறது என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.   
 
மூன்றாம் நிலைக்  கல்விதொழில் நுட்ப மற்றும் வாழ்வாதாரத் தொழிற்கல்வி பயிற்சி நெறிகள்.
 
இலங்கையின் கல்வித்  பரீட்சை முறைகளில் உள்ள பல்வேறு பாதகமான அம்சங்களை நாம் சுட்டிக் காட்டினோம், அந்தவகையில் ஒவ்வொரு வருடமும் உயர் கல்வியைத் தொடர முடியாது போகின்ற  சமூகத்தில் ஒரு பகுதியினருக்காவது மூன்றாம் நிலைக்  கல்வி, தொழில் நுட்ப மற்றும் வாழ்வாதாரத் தொழிற்கல்வி பயிற்சி நெறிகளை வழங்க இலங்கையில் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன; இத்தகைய பல்வேறு நிறுவனங்கள் தற்போதைய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 
 
மூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC) – www.tvec.gov.lk
 
மூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி ஆணைக்குழுவானது 1990 ம் ஆண்டின் 20 ஆம் இலக்க மூன்றாம்நிலை வாழ்க்கைத்தொழிற் கல்வி சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. தொழில்நுட்ப, வாழ்க்கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறையின் அதியுயர் அமைப்பாகிய இந்நிறுவனம், சமூக மற்றும் பொருளாதார இலக்குகள், மாற்றப்படுகின்ற சந்தைத் தேவைகளுடன் தொடர்புபட்ட பயனுறுதியும் வினைத்திறனும் வாய்க்கப்பெற்ற முறைமையை தாபித்தும் அதனைப் பேணியும் வருகின்றது.
 
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET) – www.techedu.gov.lk
 
1893 ஆம் ஆண்டு மரதானையில் 'தொழில்நுட்பப் பாடசாலை' தொடங்கியதிலிருந்து ஆரம்பித்த தொழில்நுட்பக் கல்வி 116 ஆண்டு வரலாற்றை உடையது. அதன் முன்னோடியான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களமானது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 38 தொழில்நுட்பக் கல்லூரிகளின் மூலம் தற்கால உலகிற்குத் தேவைப்படும் தொழில்நுட்பவியல் அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல் மற்றும் அது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளல் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் பொறுப்பாகும்.
 
வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (VTA) – www.vtasl.gov.lk
 
தேசிய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனங்களையும் 22 மாவட்ட வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையங்களையும் 238 கிராமிய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையங்களையும் உள்ளடக்கிய இலங்கை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இலங்கை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை சட்டத்தின் கீழ் திறன் பயிற்சிகளை கிராமிய இளைஞர்களுக்கு வழங்குவதற்காக தாபிக்கப்பட்டது.
 
வாழ்க்கைத்தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC)
 
வாழ்க்கைத்தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC) ஆனது வாழ்க்கைத்தொழில் தொழிநுட்பப் பயிற்சி அமைச்சின் கீழ் NITESL வளாகத்தினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி துறையில், பல்கலைக்கழக கல்வியில் மாணவர்களின் ஆர்வம் மற்றும் ஆற்றலைப் பொறுத்து ஓர் மேல்நோக்கிய பாதையினை வழங்குவதே UNIVOTEC இன் பொதுவான நோக்கமாகும்.
 
தேசிய பயிலுநர்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) – www.naita.slt.lk
 
1971 ன் 49ம் இலக்க தேசிய தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி சபையாக தாபிக்கப்பட்ட இத் தாபனம், 1990ன் 20ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் வாழ்க்கைத்தொழில் கல்வி சட்டத்தின் கீழ், தொழிற்பாடு மற்றும் பொறுப்புகளின் விரிந்த நோக்கெல்லையுடன் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையாக மாற்றம் பெற்றது.
 
தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM) – www.nibm.lk
 
1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM) பின்னர் 1976ம் ஆண்டு பாராளுமன்ற சட்டவாக்கம் இல. 23 இதன்படி கூட்டிணைக்கப்பட்டது. இது தற்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் அதிகார வரம்பினுள் சட்ட பூர்வ நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்காக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கணணி உபயோகம், ஆலோசனை சேவை மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு போன்ற பயிற்சி நெறிகளை வழங்குகின்றது.
 
வரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியம் (SDFL)
 
1999ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட திறன் அபிவிருத்தி நிதியம் தொழில் வழங்குனர்களுக்கு அவசியமான மனித வளத்தினை அபிவிருத்தி செய்வதில் ஈடுபடும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் ஒன்றிணைக்கப்பட்ட வியாபாரமாகும். இது சுய நிதியீட்டத்தினை மேற்கொள்ளும் பணிப்பாளர் சபையினால் பரிபாலிக்கப்படும் நிறுவனமாகும்.
 
இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் – www.cgtti.slt.lk
 
மோட்டார் வாகன மற்றும் ஏனைய தொழில்நுட்ப துறைகளுக்கு அவசியமான தொழில்நுட்பம் தொடர்பில் சிறிய அபிவிருத்தியினை மேற்கொள்வது இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் முக்கியமான நோக்கமாகும். மேலும் மோட்டார் வாகன பயிற்சித் துறையில் மாணவர்களுக்கு உயரிய அங்கீகாரத்துடன் கூடிய பயிற்சிகளை வழங்குவதில் உயர் தரத்தினை பராமர்pக்கும் மேன்மையான நிறுவனமாக இலங்கையில் காணப்படுகின்றது.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் – www.srilankayouth.lk
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், 1979ம் ஆண்டு சட்டமூலம் இல 69 மூலம் உருவாக்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொழில்நுட்ப திறன்கள், தலைமைத்துவ பண்புகள், தொண்டர் சேவைகள், என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காக இளைஞர்களை இலக்காகக் கொண்டு படைப்பாற்றல், சௌந்தரியம், கலை ஆகிய துறைகளில் பல்வேறுப்பட்ட செயற்றிட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
 
தேசிய இளைஞர் படையணி
 
தேசிய இளைஞர் படையணியானது 2003 ம் ஆண்டு பாராளுமன்ற சட்ட மூலம் இல 21 2002 மூலம் உருவாக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் 36 பிரதேச பயிற்சி நிலையங்களை இது கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் கீழ் இளைஞர்கள் சுய அபிவிருத்தி தொழில் வழிகாட்டல், தேசிய உரிமை, அழகியற் திறமை அபிவிருத்தி மற்றும் தொழில்சார் தொழில்நுட்ப பயிற்சி போன்ற பாடநெறிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
 
தேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகாரசபை (NYAA)
 
தேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகார சபையானது இளைஞர்களின் மனோபாவத்தினை பரந்துபட்ட அளவில் அறிவு மற்றும் திறன் என்பவற்றில் அதிகரிப்பதற்கான பங்களிப்பினை மேற்கொள்கிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களை இளைஞர்களுக்கு வழங்குவதன் மூலம் இளைஞர் அபிவிருத்திக்கான உள்ளார்ந்த அனுபவத்தினை விருத்தி செய்யும் சந்தர்ப்பத்தினை வழங்குவது NYAA யின் முக்கிய செயற்பாடாக காணப்படுகின்றது. NYAA இன் நிகழ்ச்சிகள் 240 பாடசாலைகளில் பரந்து காணப்படுகின்றது.
 
தேசிய மனிதவள அபிவிருத்திச்சபை (NHRDC) – www.nhrdc.lk
 
இந்நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கு தேவையான மனிதவள அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதும் விருத்தி செய்வதுமே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதும் மனிதவள அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட கற்கை, ஆய்வு மற்றும் அளவீடுகளை மேற்கொள்வதும் கருத்தரங்குகள் பயிற்சிப்பட்டறைகளை நடாத்துவதும் அவர்களின் நோக்கை அடைவதற்காக செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆகும்.
 
வரையறுக்கப்பட்ட இளைஞர் சேவைகள் நிறுவனம்.
 
இந் நிறுவனத்தின் பிரதான நோக்கம் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதலாகும்.
 
கிராமிய தலைவர்களைப் பயிற்றும் சர்வதேச பயிற்சி மத்திய நிலையம் (ICTRL)
 
கிராமிய தலைவர்களை பயிற்றும் சர்வதேச பயிற்சி மத்திய நிலையம் ஆனது சமூகத்தினை மையமாகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சிகளின் கீழ் முகவர் பயிற்சி, முயற்சியாண்மை பயிற்சி மற்றும் கிராமிய தலைவர்கள் பயிற்சி என்பவற்றை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.
 
இலங்கை அச்சிடுதல் நிறுவனம்
 
அச்சிடல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றில் ஊழியர் பங்குபற்றலுடனான பயிற்சி மூலம் அச்சிடல் தொழிற்துறையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை அச்சிடுதல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. மேலும் சர்வதேச ஒத்துழைப்புடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவினை சம்பாதித்துக் கொள்வதும் இதன் நோக்கமாகும்.
 
கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் (சமுத்திர பல்கலைக்கழகம்)
 
1999ம் ஆண்டு 39ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் இலங்கையில் மீன்பிடி மற்றும் தொடர்புடைய துறைகளை உள்ளடக்கும் பிரதான கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் மூலம் நடமாடும், பல பயிற்சி மற்றும் டிப்ளோமா பாநெறிகளும் மூன்று பட்ட பாடநெறிகளும் நடாத்தப்படும்.
 
வரையறுக்கப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (NYSCO)
 
தொழில் முயற்சி பயிற்சி வழங்குதல், சுயதொழில் வாய்ப்புக்காக கடனுதவி மற்றும் வழிகாட்டல் செய்தல், இலகு வங்கி முறைமூலம் கடன் வசதிகளைப் பெறுவதற்கு வழிநடாத்துதல் போன்ற செயற்பாடுகள் மூலம் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக்குவதற்கு இந்நிறுவனம் உதவி செய்கிறது.
 
இளைஞர் தொழிலாக்கல் வலையமைப்பு (YEN)
 
இளைஞர் தொழிலாக்கல் வலையமைப்பானது ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழிலாளர் அமையம் மற்றும் உலக வங்கி ஆகிய அமைப்புக்களுடன் ஏனைய தொடர்புடைய சர்வதேச நிபுணத்துவ முகவர் நிறுவனங்களின் கூட்டிணைப்பினால் உருவாக்கப்பட்டது. இளைஞர் தொழிலின்மை சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு அரசிற்கு உதவிகளை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.
 
 
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

Post Disclaimer | Support Us

Support Us

The sailanmuslim.com web site  entirely supported by individual donors and well wishers. If you regularly visit this site and wish to show your appreciation, or if you wish to see further development of sailanmuslim.com, please donate us

IMPORTANT : All content hosted on sailanmuslim.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Check Also

ADB Japan Scholarship Program at the University of Tokyo Japan | Fully Funded

ADB Japan Scholarship Program is an initiative of the Government of Japan to welcome the …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.